டாக்டர் அவதாரம் எடுக்கப்போகும் காவலர்… கைகொடுத்த 7.5% இடஒதுக்கீடு… விடாமுயற்சிக்கு கிடைத்த விஸ்வரூப வெற்றி..!!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 10:58 am

தர்மபுரி ; தர்மபுரியைச் சேர்ந்த காவலர் ஒருவர் அரசின் 7.5 இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அவரது மருத்துவராகும் கனவு நினைவாகியுள்ளது.

பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் – இன்பவள்ளி எனும் விவசாயக் கூலித் தொழிலாளிகளின் மகன் சிவராஜ். இவர் கடந்த 2016ம் ஆண்டு பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பில் 915 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்னும் ஆசை இருந்தும், தனது மதிப்பெண்கள் அதற்கு தடையாக இருந்தது.

இதையடுத்து, பிஎஸ்சி படித்து முடித்த சிவராஜ், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, ஆவடி பட்டாலியனில் 3 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கொண்டு வந்த 7.5 % இடஒதுக்கீட்டை பயன்படுத்தி மீண்டும் மருத்துவராகும் ஆசை சிவராஜுக்கு எழுந்தது. இதையடுத்து, வறுமையின் சூழலிலும், போலீஸ் வேலைக்கு மத்தியிலும், நீட் தேர்வுக்கு ஆயத்தமானார்.

தனியார் கோச்சிங் சென்டருக்கு சென்று நீட் தேர்வுக்கு ஆயத்தமாகும் நிலை இல்லாததால், தனது நண்பர்கள் கொடுத்து உதவிய புத்தகங்களின் மூலம் நீட் தேர்வுக்கு தயாரானார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்கு 290 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற சிவராஜ், தனது விடாமுயற்சியை கைவிடாமல் இந்த முறையும் தேர்வு எழுதினார். இதன்மூலம், 400 மதிப்பெண்களை பெற்று அசத்தினார்.

இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த சிவராஜுக்க மருத்துவக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.

கனவை தொலைத்து கிடைத்த வேலையை செய்த போதும், விடாப்பிடியாக தனது கனவை துரத்திச் சென்று மருத்துவராகும் காவலர் சிவராஜ் அனைத்து இளைஞர்களுக்கும் முன்னுதாரணம் ஆவார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 466

    0

    0