திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான காவலர்… கருவையும் திட்டமிட்டு கலைத்ததாக புகார் ; பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா!!
Author: Babu Lakshmanan9 August 2023, 5:07 pm
திருவாரூர் : பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே உள்ள தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் – கலா தம்பதியினரின் இளைய மகன் அஜித் (வயது 28). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டின் முன்பு திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பகுதியைச் சேர்ந்த மதுமிதா (வயது 29) என்பவர் அஜித் தன்னை பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறி நள்ளிரவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுமிதா பிகாம் மற்றும் எம்.பி.ஏ முடித்த பட்டதாரி ஆவார். இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக அஜித்துடன் பணிபுரிந்தவர் ஆவார். அஜித்தும், மதுமிதாவும் ஒரே பள்ளியில் படித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, முகநூலில் நண்பர்களாக இருந்தவர்கள் மீண்டும் சென்னையில் சந்திக்கும்போது, நண்பர்களாக பழகி மூன்று வருட காலமாக காதலித்து வந்ததாகவும், ஒரே வீட்டில் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2022இல் டிசம்பர் மாதத்தில் மதுமிதா மூன்று மாதம் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அதே மாதம் டிசம்பர் 11ல் விழுப்புரத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, டிசம்பர் 10ம் தேதியே தான் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி அஜித் திருவாரூர் வந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு பெண்ணை பார்த்து அஜித்துக்கு பெற்றோர்கள் பேசி முடித்துள்ளனர். தொடர்ந்து, அஜித்துக்கு பார்த்த பெண் அஜித் உடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்துள்ளார். இதனை கண்டறிந்த மதுமிதா அவர்களது குடும்பத்தில் இது குறித்து கூறியுள்ளார். இதனால், அஜித்திற்கும், மதுமிதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அஜித் தனது நண்பர் மூலம் திருவாரூரில் இருந்து கருக்கலைப்பு மாத்திரையை கொரியர் மூலம் வாங்கி, அதை வாந்தி சரியாவதற்கான மாத்திரை என்று மதுமிதாவிடம் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக மதுமிதா கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை டிசியிடம் மதுமிதா புகார் அளித்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவருக்கு முன்பு உறுதி அளித்து விட்டு ஒரு மாத காலம் அஜித் தலைமறைவாக இருந்துள்ளார். இதனையடுத்து, சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரிடம் மதுமிதா புகார் அளித்துள்ளார்.
அப்போது சி.எஸ்.ஆர் போடப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அஜித் ஒத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த புகாரை அனுப்பி உள்ளனர். அங்கு மார்ச் எட்டாம் தேதி இரண்டு நாட்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டு பதிவு சான்றிதழை காட்டுகிறோம் என்று அஜித் உறுதியளித்ததன் அடிப்படையில், மார்ச் 10 ஆம் தேதி மண்ணடி மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அப்போது, மதுமிதாவின் பெற்றோர் அஜித்தின் நண்பர்கள் உடன் இருந்துள்ளனர். தொடர்ந்து, பெரிய மேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பிரச்சனைகளுக்கிடையில் திருமணம் நடந்ததால் மன உளைச்சலாக இருப்பதாக கூறி நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறிய அஜித் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. மதுமிதா போன் செய்தால் வந்து விடுகிறேன் என்று கூறியபடி இருந்துள்ளார்.
இது குறித்து நேரில் சென்று மதுமிதா கேட்டதற்கு, அவரை சீருடையில் இருக்கும் போதே அடித்து பூட்ஸ் காலால் மிதித்ததாக மதுமிதா கூறுகிறார். தற்போது கடந்த மூன்று மாதமாக பணிக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாக கூறி அஜித் வீட்டின் முன்பு நள்ளிரவில் மதுமிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், வேறு இடத்தில் நான் பெண் பார்த்து இருந்தால் எனக்கு வரதட்சணை கிடைத்திருக்கும், உன்னை கல்யாணம் செய்து என்ன கிடைத்தது என்று அஜித் கூறியதாக மதுமிதா தெரிவித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் மதுமிதா அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் விட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை புகார் அளிக்க உள்ளதாக மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுமிதா கூறுகையில் தனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அஜித் பதிவேற்றுவதாகவும், அஜித்தின் குடும்பத்தார் தனது நடத்தை குறித்து மிக மோசமாகவும், அவதூறாகவும் பேசி, தன்னை நிராகரிப்பதாகவும் கூறி, இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆண் காவலர் அஜித்திடம் பேசும் போது, எனக்கும் மதுமிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எனது அக்காவின் வகுப்புத் தோழி. அந்த அடிப்படையில் நான் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவேன். மற்றபடி எனக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை கட்டாயப்படுத்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் செல்லாது என நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன், என்று கூறினார்.