கைதிகளிடம் அதிகரித்த கஞ்சா புழக்கம்… மத்திய சிறையில் போலீசார் அதிரடி ரெய்டு : 4 மணி நேர சோதனையால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2022, 5:26 pm
மதுரை : மத்திய சிறையில் கஞ்சா பதுக்கல் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 4 மணிநேரம் தொடர்ந்து சிறை வளாகத்தில் திடீர் சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறைச்சாலையில் தோட்டவேலை பணியில் ஈடுபட்ட சிறைவாசி ஒருவர் சிறைவாசிகளுக்கு கஞ்சா பொட்டல்களை வெளிநபர்களிடம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மத்திய சிறை வளாகத்தில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், புகையிலை, சிகரெட், செல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரை மாநகர் காவல்துறைக்கு உட்பட்ட 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 100 காவலர்கள் கொண்ட காவல்துறை குழுவினர் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை தொடர்ச்சியாக 4 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் பிரிவு உட்பட 1300க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள் உணவு தயாரிக்கும் பகுதிகளில், கைதிகள் மற்றும் சிறை அலுவலர்கள் பயன்படுத்தப்படும் அறைகள் , உணவுக்கூடங்கள், கழிவறைகள், தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
மகளிர் சிறையில் மகளிர் காவல்துறையினர் தனிதனியே சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மத்திய சிறையில் திடிரென நடைபெற்ற சோதனையால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து 4 மணி நேர சோதனைக்கு பின்னர் காவல்துறையினர் புறப்பட்டு சென்றனர். சோதனையில் போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து சிறை நிர்வாகத்தின் சார்பில் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
0
0