போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு.. பரந்தூரில் தொடரும் போராட்டம்!

Author: Hariharasudhan
6 நவம்பர் 2024, 1:02 மணி
Paranthur
Quick Share

பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக கணக்கெடுப்புக்கு வந்த அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், ஏகனாபுரம் நெல்வாய், நாகப்பட்டு மற்றும் இடையர்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு உள்ளன. ஆனால், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தால் பாதிப்படையக்கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை பல நாட்களாக நடத்தி வருகின்றனர்.

இதன் விளைவு, பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் 835 நாட்களாக ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து நிலம் எடுப்பு தொடர்பான அரசாணைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும், இதற்கு எதிர்கட்சிகள் தரப்பிலும், சமீபத்தில் கட்சி தொடங்கிய நடிகர் விஜயின் தவெக சார்பிலும் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள், ஆழ்துளை, கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டனர். பின்னர், நிலம் அளவிடும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியதை தொடர்ந்து, நெல்வாய் ஊராட்சியில் வீடுகளை அளவிடும் பணிக்கு வருவாய்த் துறையினர் நேற்று வந்து உள்ளனர்.

இவ்வாறு அளவிடும் பணிக்காக வந்த வருவாய்த் துறையினரை அந்தப் பகுதி மக்கள் தடுத்தது மட்டுமல்லாமல், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, அரசு பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், கணக்கெடுப்பு பணிகளுக்காகச் சென்ற அரசுப் பணியாளர்களை தடுத்ததாக 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் பொன்னேரிகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசாரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆபாசமாக திட்டிய தவெக நிர்வாகி.. தீர்க்கவில்லையா மாநாட்டு பாக்கி? பரபரப்பு புகார்

  • Su venkatesan மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!
  • Views: - 33

    0

    0

    மறுமொழி இடவும்