போதும் என்றளவில் போலீஸ் கட்டுப்பாடு.. பரந்தூரில் விஜய்க்கு கிடுக்குப்பிடி!
Author: Hariharasudhan18 January 2025, 2:53 pm
பரந்தூருக்கு வரவுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், குறிப்பிட்ட நேரத்தில் தான் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை, வருகிற 20ஆம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, விஜய் வருகையை ஒட்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து அக்கட்சியினர் தீவிர கள ஆய்வில் இறங்கியுள்ளனர்.
மேலும், இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் கூறுகையில், “விஜய் வருகிற 20ஆம் தேதி பரந்தூர் வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எந்த இடத்தில் மக்களைச் சந்தித்து பேசுகிறார் என்பது குறித்து இன்று தெரிவிப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இந்த நிலையில், விஜய் மக்களைச் சந்திப்பதில், காவல்துறை தரப்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, “அனுமதி அளித்த இடத்தில் மட்டும்தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டம் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் அவர்கள் வர வேண்டும்.
இதையும் படிங்க: பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!
எந்த இடத்தில் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும். அந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்” ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய விஜய், தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தினார். அப்போது, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படாது என்ற தீர்மானத்தையும் அவர் முன்மொழிந்தார். ஆனால், அதற்குப் பிறகு எந்த பேச்சும் இல்லை.
அதேநேரம், களத்திற்கு வராமலே விஜய் அறிக்கை பாணியில் அரசியலைத் தொடங்கிவிட்டார் எனவும் கருத்துக்கள் நிலவின. இந்த நிலையில் தான், முதன்முதலாக நேரடியாக களத்திற்குச் சென்று விஜய் மக்களைச் சந்திக்க இருக்கிறார்.