காரில் குழந்தை கடத்தல்.. சுற்றிவளைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2024, 10:59 am
வெளிமாநிலத்திலிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை காரில் வைத்து கடத்திச் செல்வதாக தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் காவல்துறையினர் காரை தடுத்த நிறுத்துவதற்கு முயற்சித்த போது அந்த கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் சிக்கத்தம்பூர் பகுதி மக்கள் சாலையின் குறுக்கே கற்களை வைத்து அந்தக் காரை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
அப்போதும் அந்தக் கார் நிற்காமல் துறையூரை நோக்கி சென்றது. உடனடியாக இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து துறையூர் காவல்துறைய பாலக்கரை பகுதியில் பேரிகாடுகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் உதவியுடன் காரை மரித்து பிடித்தனர்.
அப்போது காரில் குழந்தைக் கடத்தப்படுவதாக பரவிய வதந்தியால் கொந்தளித்த பொதுமக்கள் அந்தக் காரை அடித்து நொறுக்க முயன்றனர்.
காவல்துறையினர் பொது மக்களை கட்டுப்படுத்தி குழந்தையை கடத்த வில்லை என பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி காரை மீட்டுக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.
மேலும் காருக்குள் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் பெங்களூரில் இருந்து சேலம், தம்மம்பட்டி, துறையூர் வழியாக திருச்சிக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்களை கொண்டு செல்வதாக தெரிய வருகிறது.
காருக்குள் சுமார் 30மூட்டைகள் குட்கா பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் எங்கிருந்து யாரால் குட்கா பொருட்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை கிடைத்ததாக கூறி பொதுமக்கள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.