தமிழகத்தில் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!
Author: Rajesh27 February 2022, 9:36 am
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
நாட்டில் போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதற்காக 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் மருத்துவ துறை சார்பில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதில், 5 வயகுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி அவர்களுக்கு பொம்மை உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கினார்.