சந்திரசேகர் ராவுக்கு நடந்தது CM ஸ்டாலினுக்கும் நடக்கும்… குடும்ப ஆட்சிக்கு இனி வேலையில்லை ; பொள்ளாச்சி ஜெயராமன்…!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 5:04 pm

திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் மூன்று மாநிலத்தில் மண்ணை கவ்வியது, விரைவில் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அங்கேரிபாளையம் பகுதி கழகம் சார்பில் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் K.N.விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் அவர்கள் பங்கேற்று உறுப்பினர்களின் படிவங்களை ஆய்வு மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- சென்னை பெருநகரத்தில் மழை வந்தால் மழைநீர் தேங்காதவாறு ரூ.4000 கோடிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக முதல்வரும், சுகாதாரத் அமைச்சரும் தெரிவித்து வந்தனர், ஆனால் இன்று சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. நூற்றுக்கணக்கான கார்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்படுகிறது.

மக்களை பாதுகாக்க கூடிய பேரிடர் மேலாண்மை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு படகில் தான் இன்று செல்ல வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், 4000 கோடி ரூபாய் பணம் என்ன ஆனது என்று கேட்டால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு மட்டும்தான் தெரியும். அந்த அளவுக்கு சென்னை இன்று வெள்ளக்காடாக மாறி உள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் மழை வந்தால் கழிவு நீர் கால்வாய் ஓரம் நின்று கொண்டு, வெள்ளம் வெள்ளம் என்று கூறும் ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் சென்னை மொத்தமாக மூழ்கியுள்ளது.

கூடா நட்பு கேடாய் விளைவிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நான்கு மாநில தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்தினால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. திமுகவின் இந்து மத எதிர்ப்பு விரோத பேச்சு, சனாதன எதிர்ப்பு பேச்சு தான் இந்தியா முழுவதும் எதிரொலித்ததின் காரணமாக காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் மண்ணை கவ்வியது.

தெலுங்கானாவில் குடும்ப ஆட்சிக்கு இனி வேலை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. சந்திரசேகர் ராவ் அவரது மகன், மகள், மருமகன் என்று குடும்பத்தையே தேர்தலில் நிற்க வைத்தார். ஆனால் கடைசியில் அவரே தோல்வி கண்டார். இதே நிலைமை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.

234 தொகுதிகளிலும் அதிமுக அபார வெற்றி பெறும். இவர்கள் சந்தோஷத்திற்கு கார் பந்தயம் தற்போது அவசியமா..? சென்னை மக்கள் துயரத்தில் உள்ளனர். பசியில் வாடி வருகின்றனர். கொசுத்தொல்லை இல்லாத சென்னை மாநகராட்சியை உருவாக்கி நோய் இல்லாத நிலைமை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது காய்ச்சல் வந்தால் எங்கு செல்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர், என்றார்.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?