தொகுதியை கூறுபோட்டு விற்ற திமுக… 234 தொகுதிகளையும் இப்படி கவனிக்க முடியுமா..? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி..!!
Author: Babu Lakshmanan2 March 2023, 5:08 pm
திருமங்கலம் ஃபார்முலாவை முறியடித்து விஞ்ஞான ரீதியாக இப்படியும் ஒரு வெற்றி பெற முடியும் என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நிரூபித்துள்ளது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது, அங்கு தேர்தல் நடந்ததா? என்று கேட்டுவிட்டு இதுவரை தமிழக வரலாற்றில் தொகுதியை கூறு போட்டு விற்றது போன்று தொகுதியில் அவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது திருமங்கலம் ஃபார்முலா போன்று ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் பண பலம் பாதாளம் வரை பாய்ந்தது. திமுக அரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை எப்படி கவனித்தார்களோ அதே போன்று, நாளை முதல் 234 தொகுதிகளையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திரிபுரா, நாகலாந்து மாநில பாஜக வெற்றியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாநிலச் செயலாளர் மீனாதேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துராமன், சுனில் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.