அது சஸ்பென்ஸ்… விரைவில் அறிவிப்பு வரும் ; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு…!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 7:49 pm

தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் சண்டை போட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை விட அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ராஜ் நிவாஸில் நாகாலாந்து மாநில உதய நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை நிலை ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- புதுச்சேரி அடுத்த பாகூர் கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அங்கன்வாடிகள் பராமரிப்பு கிடந்தது. இதனை உடனடியாக சரி செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசினால், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நட்பு பலமாக இருந்தால் மக்களுக்கும் பல திட்டங்கள் கிடைக்கும். அமர்ந்து பேசுங்கள் என்று கூறினால், இது என்ன குடும்பமா அமர்ந்து பேச என்று என்னை கடிந்து கொள்கிறார்கள்.

சண்டை போட்டுக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை விட அமர்ந்து பேசினால் பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆளுநரும், முதல்வரும் பாலமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது ;- அதற்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. வருங்காலத்தில் பார்க்கலாம். பின்னால் தெரிவிக்கப்படும். அது சஸ்பென்ஸ், என்றார்.

மேலும் பேசிய அவர், நேற்று நடைபெற்ற அரசு விழாவில் சட்டமன்ற உறுப்பினர், நான் ஏதோ விழா ஏற்பாடு செய்தது போன்று என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். விழா ஏற்பாடு செய்தது மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அழைக்கவில்லை என்றால், அவர் கலெக்டரை தான் கேள்வி கேட்டிருக்க வேண்டும். என்னிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை, என்று குறிப்பிட்டார்.

மேலும் அந்த விழாவில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக தெரிவித்த அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வேற்றுமை பார்க்க வேண்டாம், மக்கள் தொகுதிக்கு சென்று மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், அரசு விழாக்களில் யாருக்கு முக்கியத்துவம் என்பது இல்லை, என்னை விழாவுக்கு அழைத்ததால் செல்வேன், அழைக்கவில்லை என்றாலும் நான் செல்லப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!