ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சியினர்… தடுப்புகளை மீறி சென்றதால் தடியடி ; போர்க்களமாக மாறிய புதுச்சேரி..!!
Author: Babu Lakshmanan8 March 2024, 3:51 pm
இண்டியா கூட்டணி கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்ற போது, தடுப்புகளை மீறி வந்த போராட்டக்காரர்களும், போலீசாரும் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டம் தெரிவித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இண்டியா கூட்டணி கட்சியினர் ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் மாளிகை அருகே வந்தவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது, கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் தடுப்பு கட்டைகளை தள்ளியும், தடுப்பு கட்டைகளை தாண்டி ஆளுநர் மாளிகை உள்ளே செல்ல முயன்ற போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் போலீசார் லத்தியை கொண்டு போராட்டக்காரர்களை தாக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், தங்கள் கொண்டு வந்த கொடி கட்டைகளை கொண்டு பதிலுக்கு போலீசாரை கடுமையாக தாக்கினார்.
இதனால், ஆளுநர் அருகே போர்க்களம் போல காட்சி அளித்தது. தொடர்ந்து ஒரு சிலர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.