பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழா… சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பாய்மரப்படகுகளின் அணிவகுப்பு…!!
Author: Babu Lakshmanan19 March 2022, 8:03 pm
புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரையில் பாய்மரப்படகு சங்கம் மற்றும் பிரஞ்சு தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட பாய்மரப்படகுகளின் அணிவகுப்பு, புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாவினரை வெகுவாக கவர்ந்தது.
பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பாய்மர படகு சங்கம் மற்றும் பிரெஞ்சு தூதரகம் இணைந்து பாய்மரப்படகு அணிவகுப்பை நடத்தியது.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் உள்ள கடல் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பாய்மரப் படகுகளில் 9 வயது முதல் 60 வயது வரை உள்ள 20க்கும் மேற்பட்ட பாய்மரப்படகு வீரர்கள் அணிவகுப்பு மேற்கொண்டு பல்வேறு கடல் சாகசங்களையும் செய்தனர்.
இந்த பாய்மர படகு அணிவகுப்பை பிரஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பாய்மர படகு அணிவகுப்பை புதுச்சேரி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செலிபி எடுத்தும் மகிழ்ந்தனர்.