சொந்த ஊர்களுக்கு செல்ல அலைமோதிய மக்கள் கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்த பயணிகள் ; சிறப்பு பேருந்துகள் இல்லாததால் அவதி…!
Author: Babu Lakshmanan14 January 2023, 11:55 am
கோவை : பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் 6 மணி நேரமாக இரவில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழிலில் தொடங்கி ஹோட்டல்கள் ஐடி நிறுவனங்கள் வரை ஏராளமான வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அதே போல பலர் கல்வி நிலையங்களிலும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு இவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்துள்ளனர். மதுரை, தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இரவில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
சுமார் 6 மணி நேரமாக பெருந்துக்காக மக்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிட்பாக்கெட் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துறை அதிகாரியிடமும், பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.