‘ஐயா, எனக்கு பொங்கல் பரிசு’.. ஏக்கத்தோடு கேட்ட மூதாட்டி ; உடனே மாவட்ட ஆட்சியர் செய்த செயல்… நெகிழ்ந்து போன மக்கள்!!
Author: Babu Lakshmanan9 January 2023, 2:10 pm
வேலூர் : வேலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவரின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் செய்த செயல் பேசு பொருளாகி வருகிறது.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக அரிசி பெரும் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க உத்தரவிட்ட நிலையில், இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் நான்கு லட்சத்து 49 ஆயிரத்து 584 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்டத்திலுள்ள 485 முழு நேர மற்றும் 221 பகுதி நேர ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 706 ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதனை தொரப்பாடி பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மூதாட்டி ஒருவர் தனது ரேஷன் அட்டையை தனது மகன் எடுத்து வைத்திருப்பதாகவும், எனக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மூதாட்டியின் கோரிக்கையை பொறுமையாக கேட்டு, அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.