ரூ.70 லட்சம் கையாடல் செய்ததாக டார்ச்சர்… விரக்தியின் உச்சத்தில் போஸ்ட் மாஸ்டர்.. வீடியோவை பார்த்து கதறிய குடும்பம்..!

Author: Babu Lakshmanan
5 ஆகஸ்ட் 2023, 10:05 காலை
Quick Share

போஸ்ட் மாஸ்டர் 70 லட்ச ரூபாய் பணம் கையாடல் செய்ததாக அஞ்சலக அதிகாரிகள் மற்றும் கந்துவட்டி கும்பல் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு போஸ்ட் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கோவிந்தகுடி கம்மாளர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையன். இவரது இரண்டாவது மகன் வினோத். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திற்குட்பட்ட உடையாளூர் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக கடந்த ஏழு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி வினோத் அஞ்சலக துறையில் 70 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக சந்தேகத்தின் பெயரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மதுபானத்தில் விஷம் கலந்து குடித்த வினோத் தனது சாவிற்கு உயர் அதிகாரிகள் காரணம் என்றும், அதேபோன்று வட்டிக்கு பணம் வாங்கியதில் அதிக வட்டி வசூலித்த இருவர் காரணம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில், இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வினோத்தின் தந்தை கருப்பையன் வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி தங்களது வீட்டிற்கு வந்த அஞ்சலக அதிகாரிகள் தற்போது மறு கணக்கெடுப்பு செய்தோம். அதில் 40 லட்சம் தான் குறைகிறது என்றும், மேற்படி பணம் சம்பந்தமாக யார் கேட்டாலும், கையாடல் செய்த பணத்தை ஒத்துக் கொள், பின்பு நாம் அதை சரி செய்து கொள்ளலாம் என்று மூன்று அஞ்சலக அதிகாரிகள் கூறியதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து அஞ்சலக அதிகாரிகள் தனது மகனுக்கு வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் மூன்று தவணையாக 1.75 லட்சம் ரூபாய் பணம் வாங்கி சென்றதாகவும், இதனால் அவன் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதேபோன்று உடையாளூரை சேர்ந்த சைமன்ராஜ் மற்றும் சாலமன் என்பவர்களிடம் தனது மகன் நான்கு பைசா வட்டி விதத்தில் 14 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி இருப்பதும், அவர்களும் என் மகனை மிரட்டி உள்ளதாகவும், எங்களிடம் என் மகன் தெரிவித்திருந்த நிலையில், 5 வருடமாக வினோத் வட்டி கட்டி இருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் தெரிவித்து இருந்தான். இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த எனது மகனை கடந்த 31 ஆம் தேதி வலங்கைமான் அஞ்சலகத்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தி மிரட்டி உள்ளார்கள்.

மேலும் அடித்துள்ளார்கள். இந்த நிகழ்வினை தொடர்ந்து வீட்டிற்கு வரும் வழியில் எனது மகன் வினோத் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கீழே விழுந்ததாகவும், உடனே கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அங்கு சேர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்துள்ளார், என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

v

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து வலங்கைமான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 388

    0

    0