முழுக்க முழுக்க பெண்கள் நிர்வாகம் தான்: ஆச்சர்யமூட்டும் கோவை தபால் நிலையம்..!!
Author: Rajesh8 March 2022, 1:45 pm
கோவை : கோவையில் உள்ள அஞ்சலகத்தை முழுக்க பெண்களே இணைந்து நடத்தி வருவது கேட்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
கோவை லாலி சாலையில் உள்ள துணை அஞ்சல் அலுவலகம் 1908ம் ஆண்டு துவங்கப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்த இந்த தபால் நிலையம், வேளாண் பல்கலை., வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
இங்கு ஒரு பெண் துணை அஞ்சல் அதிகாரி, 3 பெண் அஞ்சல் அலுவலர்கள், 3 பெண் தபால்காரர்கள், ஒரு பண் திறன் ஊழியர், ஒரு துப்புறவாளர் என 9 பேரும் பெண்களாகவே பணியில் உள்ளனர்.
இதுகுறித்து துணை அஞ்சல் அதிகாரி நிர்மலா கூறியதாவது, இந்த அஞ்சலகத்தில் சிறு சேமிப்பு பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் செல்வமகள் சேமிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டு வெளிநாடுகளுக்கு தபால்கள் மற்றும் பார்சல்கள் அனுப்பும் சேவை, ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் சேவைகள் செயல்படுத்தப்படுகிறது. தினமும் 20 முதல் 30 பைகள் பார்சல் அனுப்பப்படுகிறது. இதனை செய்வது ஒரு பெண் ஊழியர்.
52 வயதான பெண் தபால்காரர் நடந்தே சென்று தபால்களை விநியோகம் செய்கிறார். சோர்வடையாமல் பணியாற்றுகிறோம்.
2018-19 ஆம் ஆண்டில் அனைத்து பிரிவுகளிலும் எங்கள் அலுவலகம் முதன்மை அலுவலகமாக திகழ்ந்து விருதுகளை பெற்றுள்ளது.
தபால் துறை பெரிய துறையாக உள்ளது. இத்தனை தபால் அலுவலகங்கள் இருந்தாலும், எங்களது அலுவலகத்தை பெண்கள் மட்டும் பணியாற்றும் அலுவலகமாக தேர்வு செய்தது பெருமை அளிக்கிறது. இதற்காக எங்கள் மேற்குமண்டல அஞ்சல் துறை தலைவர் சுனிதா அயோத்யா, பரிந்துரைத்த முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் அசோக்குமார் எங்கள் அஞ்சல் அலுவலகம் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம்.
எல்லாவகையிலும், அனைத்து சேவைகளிலும் முன் மாதிரியாக செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.