வீட்டிலே பிரசவம் பார்ப்பதற்கு வாட்ஸ்ஆப் குழு.. மருத்துவத்துறையை உலுக்கிய சென்னை சம்பவம்!

Author: Hariharasudhan
20 November 2024, 5:23 pm

சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரிடம் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை மாவட்டம், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மனோகரன். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், 3வது குழந்தைக்கு சுகன்யா கர்ப்பம் தரித்து உள்ளார்.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாத சுகன்யாவுக்கு, வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து உள்ளது. மேலும், சுகன்யாவுக்கு அவரது கணவர் மனோகரனே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் குழு மூலம் பிரசவம்: இந்த அதிர்ச்சிகரமான தகவல் வாட்ஸ்ஆப் மூலம் பரவத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் வாட்ஸ்ஆப் தகவலை அடிப்படையாகக் கொண்டு குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

TAMIL PREGNANT WOMEN

அப்போது, மனோகரனின் செல்போனை வாங்கி போலீசார் சோதனை செய்து உள்ளனர். அதில், ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு ஒன்று இருந்து உள்ளது. ஆயிரத்து 24 உறுப்பினர்களோடு செயல்படும் இந்தக் குழுவில் வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்கள் அதிக அளவில் பகிரப்பட்டு இருந்ததும் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

இதையும் படிங்க: ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு.. பட்டப்பகலில் கொடூரம்!

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே மனோகரன், தனது மனைவி சுகன்யாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதேநேரம், தாயும் சேயும் நலம் உடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும், இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

குறிப்பு: இந்தச் செய்தி பல்வேறு செய்தி ஊடக தளங்களில் இருந்து திரட்டப்பட்டவையே. எந்தவொரு நோய்க்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பெயரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 144

    0

    0