2 வயது மகளுடன் 5 மாத கர்ப்பிணி கிணற்றில் குதித்து தற்கொலை ; மாமனாரும் தற்கொலை முயற்சி.. மதுரையை உலுக்கிய சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 2:21 pm

மதுரையில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த கணவனின் துக்கம் தாங்க முடியாமல், இரண்டு வயது மகளுடன் கர்ப்பிணி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் ஜெயம் நகரைச் சேர்ந்த விவேக் (33), மதுரை செல்லூரைச் சேர்ந்த ஷாலினி (23) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் விஷாகா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஷாலினி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகள் விசாகாவிற்கு 2வது பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தடபுடலாக பிரியாணி உள்ளிட்ட உணவுகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது. அன்று இரவே விவேக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் தீவிர சிகிச்சையிலிருந்து சிகிச்சை பலனின்றி, இதய நோயால் விவேக் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஷாலினி கணவன் இறந்த துக்கம் தாளாமல் மன வேதனையில் இருந்துள்ளார். உறவினர்கள் ஆறுதல் சொல்லியும் ஆறுதல் அடையாத ஷாலினி இரண்டு வயது பெண் குழந்தை விஷாகாவுடன் இன்று காலை வீட்டின் அருகே உள்ள பராமரிப்பற்ற கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஷாலினி குழந்தையுடன் கிணற்றில் குதித்த சம்பவம் அறிந்து உடனடியாக உறவினர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஷாலினி உடலை மீட்டனர். மேலும், குழந்தை விசாகாவின் உடல் கிடைக்காததால், கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து இரண்டு வயது குழந்தை விசாகா உடலை மீட்டனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மகனும் இறந்து மருமகளும், பேத்தியும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த மாமனார் ரவிச்சந்திரனும் தூக்க மாத்திரை உட்கொண்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் நலக்குறைவால் கணவன் உயிரிழந்ததால் மனம் உடைந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண், தனது இரண்டு வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 486

    0

    0