ஓடும் ரயிலில் பாத்ரூம் சென்ற கர்ப்பிணி.. காத்திருந்த கொடூரன்.. இபிஎஸ் காலையிலே போட்ட பதிவு!
Author: Hariharasudhan7 February 2025, 9:42 am
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்து கீழே தள்ளிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர்: கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் நேற்று பயணித்துள்ளார். இந்த நிலையில், ரயில் ஜோலார்பேட்டை வந்துள்ளது.
அப்போது, அடையாளம் தெரியாத ஒரு நபர் அந்தப் பெட்டியில் ஏறியதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த நபரிடம், இது பெண்கள் மட்டும் பயணிக்கக் கூடிய பெட்டி என்று கர்ப்பிணி கூறியுள்ளார். இருப்பினும், அந்த நபர் இறங்கவில்லை எனத் தெரிகிறது
இந்த நிலையில், அந்த கர்ப்பிணி கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரைப் பின் தொடர்ந்த அந்த நபர், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்பார்க்காத அந்தப் பெண், கத்திக் கூச்சலிட்டு உள்ளார். இதனால் கர்ப்பிணி என்றும் பாராமல், அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
பின்னர், கர்ப்பிணியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள், அவரை மீட்டுள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கீழே தள்ளி விட்டதில் கர்ப்பிணிக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று இரவு அந்தப் பெண் அளித்த புகார் மற்றும் அந்த்க நபரின் அடையாளத்தின்படி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கோவை – திருப்பதி இடையே சென்று கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: பெற்றோரிடம் ஓடிப்போய் சொன்ன மகள்.. நள்ளிரவில் பள்ளியை சூறையாடிய உறவினர்கள்.. மணப்பாறையில் பரபரப்பு!
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.
கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள ,
வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.