கர்ப்பிணினு சொல்லியும் விடல.. பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி!
Author: Hariharasudhan7 February 2025, 2:13 pm
கர்ப்பிணி எனக் கூறியும் விடாமல் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
வேலூர்: இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ரயிலின் மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட அவன், என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டான். நானும் அவனிடம் அரை மணி நேரமாகப் போராடினேன். கர்ப்பிணியாக இருப்பதால் விட்டுவிடுமாறும் கொஞ்சினேன்.
பின்னர் கத்திக் கூச்சலிட்டதால், என் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, கையை உடைத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். ரயிலில் இருந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே கையில் ரயிலைப் பிடித்துக் கொண்டு போராடினேன். ஆனால், என் கையை எட்டி உதைத்து, கீழே தள்ளிவிட்டான்.
பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மகளிர் பெட்டியில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்று வேறு யாருக்கும் எதுவும் நடக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.06) தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக, கோயம்புத்தூர் – திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் ரிலீஸ்.. திமுகவில் இதுவே தகுதி.. அண்ணாமலை திடீர் பதிவு!
அப்போது, அவர் ரயில் கழிவறைக்குச் சென்றபோது, ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், கர்ப்பிணி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், வேலூர், மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தொடர்ந்து, அவர் காட்பாடி ரயில் நிலையம் வந்ததும் இறங்கி தப்பியுள்ளார். இவர் அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.