நான் என்ன ஜோசியமா பார்க்குறேன்? விஜய் பெயர் சொன்னதும் சட்டென மாறிய பிரேமலதா!
Author: Hariharasudhan12 February 2025, 2:54 pm
விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 25ஆம் ஆண்டு கொடி நாளான இன்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார்.
பின்னர், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்ய சபா பதவி.
அந்த ராஜ்யசபா தேர்தல் நாள் வரும்போது, தேமுதிக சார்பில் யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 ஆண்டு கட்சி. எனவே, இந்தக் கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது.
ஏற்கனவே நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான கருத்துக்களைக் கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தும், செங்கோட்டையன் ஒரு கருத்தும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் போல இருக்கேன்.. ஆண் குழந்தை வேணும் ; சிரஞ்சீவியை விளாசும் நெட்டிசன்கள்!
இதில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். 2026ஆம் ஆண்டி தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, கேப்டன் கனவை வென்றெடுப்போம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று விஜயுடன் கூட்டணி குறித்து பேசிய விஜய பிரபாகரன், “அப்பாவைப் (விஜயகாந்த்) போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என்பதை முடிவு செய்வோம்” எனக் கூறியிருந்தார்.