கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

Author: Hariharasudhan
10 March 2025, 11:11 am

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என விஜயை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தேமுதிக பொதுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. என் மக்களே என் மக்களே என்று உங்களுக்காகவே உழைத்து, உங்களுக்காகவே வாழ்ந்து உங்களுக்காகவே மறைந்தவர்தான் விஜயகாந்த்.

என்னுடைய பிறந்தநாள் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் எனக்கென்று எந்த விழாவும் இல்லை. என்றைக்கு விஜயகாந்த் மறைந்தாரோ, அன்றே என்னுடைய அனைத்து விழாக்களும் முடிந்துவிட்டது. இனி நான் வாழும் வாழ்வு உங்களுக்காகத்தான், என் மக்களுக்காகத்தான்.

நமது தலைவர் விஜயகாந்த், தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்தி, தெலுங்கு என எத்தனையோ மொழிப் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், சொல் ஒன்று செயல் ஒன்று என்று விஜயகாந்த் செயல்பட மாட்டார். தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என்று ஒரே உறுதியோடு தன்னுடைய காலம் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் அவர்.

Premalatha Vijayakanth

சிலர் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பார்கள். வேறு மொழிப் படங்களிலும் நடிப்பார்கள், மேடையில் பல வசனங்கள் பேசிவிட்டு, கோலா, நகை விளம்பரங்களில் நடிப்பார்கள்” என தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மேலும் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பெயரளவுக்கு மட்டுமே திண்டுக்கல் மாநகராட்சியாக இருக்கின்றது. ஆனால், எந்தவொரு அடிப்படை வசதியும் இங்கு இல்லை. சிறுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடைபெற்றது. யார் அந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் எனச் சொல்லாமல் விவசாயத்துக்கு கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து இந்தச் சம்பவம் நடந்தது எனக் கூறுகிறார்கள்.

இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைபோல் இருக்கிறது. சட்டம், ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைக் காக்க வேண்டும். இந்த பொறுப்பு தமிழக அரசுக்கும் உள்ளது” எனக் கூறினார். நடிகர் விஜய், முன்னதாக கோலா கூல்டிரிங்ஸ் விளம்பரத்தில் நடித்துவிட்டு, அதற்கு எதிராக கத்தி படத்தில் வசனம் பேசியதற்கே எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!
  • Leave a Reply