தமிழ்நாடு ஒரு கொலைநாடு – பிரேமலதாவின் திடீர் காட்டத்திற்கு காரணம் என்ன?
Author: Hariharasudhan21 November 2024, 11:12 am
தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் அருகே பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணனிடம் ஜூனியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளி அருகில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பட்டப்பகலில் மக்கள் பெருவாரியாகச் சூழ்ந்து இருக்கிற அந்தப் பகுதியில் வழக்கறிஞரை நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்தது கண்டனத்திற்குரியது. என்ன காரணத்துக்காகப் படுகொலை நடந்தது என்ற உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமை.
படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது அனைவரின் ஈரக்குலையும் நடுங்கும் அளவு படுபாதகமான ஒரு படுகொலை தமிழ்நாட்டில் ஓசூரில் நடந்திருக்கிறது. மேலும் பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியருக்குப் பாதுகாப்பு இல்லை, படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை,.
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை, அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை.
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத முதலமைச்சர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கு 200 வெல்வோம் என்று சொல்வது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது” எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்.. பட்டியலிட்ட இபிஎஸ்!
முன்னதாக, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளார் வெட்டிய நபர் நீதிமன்றத்தில் சரணடைய, இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சரண் அடைந்தவரின் மனைவியையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் ஓய்வறையில் இருந்த ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. திருமணத்திற்கு மறுத்ததால் குத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்து உள்ளார். இது ஒரே நாளில் தமிழகத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் ஆகும்.