மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!
Author: Hariharasudhan9 March 2025, 4:57 pm
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியல் கட்சிகள் வியூக வகுப்பாளர்களை நியமனம் செய்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் வியூக வகுப்பாளர்களை நியமிப்பது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு.
ஆலோசகரை வைப்பதால் வெற்றி பெறும் என்றால், அந்த ஆலோசகரே போட்டியிட்ட மாநிலத்தில் ஜெயித்தாரா என்பது கேள்விதான். கேப்டன் விஜயகாந்த், மக்களைத்தான் நம்பினார்” எனக் கூறினார். இதனையடுத்து, கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது. இது மார்ச் மாதம் தான். எனவே, பொறுத்திருங்கள். அந்த காலம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்றார்.
தொடர்ந்து, ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் ஏதேனும் மன வருத்தம் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அதுபோல ஏதுமில்லை” எனத் தெரிவித்தார். எனவே, அதிமுக – தேமுதிக இடையேயான மனக்கசப்பு முடிவுக்கு வந்திருக்குமோ எனத் தெரிகிறது.
மேலும், வருகிற ஜூலை மாதத்துடன் தமிழ்நாட்டில் 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ளது. இதன்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்
இந்த நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக உறுதி அளித்து உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.