கோவையில் கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடு…16 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலை: மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு..!!

Author: Rajesh
22 January 2022, 2:32 pm

கோவை: கொரோனா சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 528 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் இன்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் 750 இடங்களில் நடைபெறுகின்றன.

மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனை தடுப்பூசி முகாமில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் இங்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது மாவட்டத்தில் 13 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. 16 ஆயிரத்து 528 படுக்கைகள் தயாராக உள்ளன. மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை. கோவையில் 176 இடங்களில் மைக்ரோ கன்டைன்மெண்ட் ஜோன் அமைத்து அந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று கோவையில் பரிசோதனை செய்ததில் 19.7 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் மாநில எல்லையில் 11 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 48 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்பதற்கான சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!