தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகிறதா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Author: Babu Lakshmanan6 December 2022, 4:14 pm
தூத்துக்குடி ; தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகிறதா..? என்ற கேள்வி குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது;- பள்ளிகளுக்கு நடைபெற உள்ள அரையாண்டுத் தேர்வு எல்லா ஆண்டும் நடப்பது போல் நடைபெறும். தேர்வு விடுமுறை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளியை இணைப்பது அதிக அளவு மாணவர் சேர்க்கை வரவேண்டும் என்பதற்குதான். தொடக்கப்பள்ளியில் 10 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அதனால் தொடக்கப் பள்ளிகள் மூடப்படாது, என தெரிவித்தார்.
முன்னதாக அவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது;- ஏசி ரூமில் இருந்து பணி புரிவதை விட களத்தில் சென்று பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரியிடம் கலந்துரையாடி பணிகளை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஒரு தொகுதியில் ஒரு பள்ளிக்கு திடீரென சென்று ஆசிரியர்களிடம் கலந்துரையாடி வருகிறேன். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் குறைகளை மட்டும் எடுத்துச் சொல்லாமல் சில அறிவுரைகளும் வழங்கலாம், என பேசினார்.
0
0