கோவையை சேர்ந்த ஓவியரை ‘மனதின் குரல்’ மூலம் மனதார பாராட்டிய பிரதமர் மோடி : குவியும் வாழ்த்து..!!!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2023, 8:53 am
பாரத பிரதமர் அவர்கள் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத் – மனதின் குரல்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட 103வது மனதின் குரல் நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் சார்ந்து பிரதமர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓவியர் ராகவன் சுரேஷ் செய்து வரும் ‘அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஓவிய ஆவண’ முயற்சி குறித்து குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த தன்னுடைய ஓவிய முயற்சி குறித்து பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருப்பது, தனக்கும் தனது முயற்சிக்குமான மிகப் பெரிய அங்கீகாரம் என தெரிவிக்கிறார் ஓவியர் ராகவன் சுரேஷ்.
59 வயதாகும் இவர், பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். ஓய்வு நேரத்தில் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை தத்துரூபமான ஓவியமாக வரைந்து வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை மிகத் துல்லியமாக உரிய தகவல்களோடு ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த ஓவியங்களை வரைந்துள்ளதாக இவர் கூறுகிறார்.
மேலும், அடுத்த தலைமுறையினருக்கு அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
0
0