தரிசனம் முடிந்து ராமகிருஷ்ணா மடத்தில் ஓய்வெடுக்க சென்றார் பிரதமர் மோடி.. நாளை மீண்டும் டெல்லி பயணம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2024, 9:47 pm
தரிசனம் முடிந்து ராமகிருஷ்ணா மடத்தில் ஓய்வெடுக்க சென்றார் பிரதமர் மோடி.. நாளை மீண்டும் டெல்லி பயணம்!!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமநாதசுவாமி திருக்கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு ராமகிருஷ்ண மடத்திற்கு ஒய்வுக்கு சென்றார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் திருச்சியில் இருந்து புறப்பட்டு விமான மூலம் ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் இறங்குதலத்திற்கு மதியம் இரண்டு பத்து மணி அளவில் வருகை தந்தார்.
அவருக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
அதன் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் புறப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி சுமார் 2 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக பொதுமக்களை சந்தித்தவாறு ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்
ஓய்வுக்கு பின் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பின்பு அங்கிருந்து பேட்டரி வாகனம் மூலம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்தடைந்தார் .
கோவிலுக்கு வந்த அவருக்கு ராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது மரியாதையை ஏற்றுக்கொண்டு கோவிலுக்கு உள்ளே உள்ள 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடிய பின்பு திருக்கோவில் அருகாமையில் அமைந்துள்ள உடை மாற்றும் அறையில் தனது உடையை மாற்றிக் கொண்டு காவி உடையில் மீண்டும் கிழக்கு கோபுர வாசல் மூன்றாம் பிரகாரம் வழியாக முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதரை முதலில் வழிபட்டார் அதன் பின் ஜோதிலிங்கமாக அமைந்துள்ள மூலவர் ராமநாதசுவாமிக்கு கங்கா அபிஷேகத் நடைபெற்றது.
கங்கா அபிஷேகத்துக்கு பின் சிறப்பு தீபாரதனையில் கலந்து கொண்டார் அதன் பின் ராமநாத சுவாமி திருக்கோவில் பர்வத வர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக மாலை 5:30 மணி அளவில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலுக்கு வெளியே வந்து பொதுமக்களை சந்தித்தவாறு தனது கைகளை காட்டி உற்சாகப்படுத்தினார் அதன் பின் ஓய்வுக்காக ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
பிரதமரின் பாதுகாப்பு நலன் கருதி ராமநாதசுவாமி திருக்கோவிலில் இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்களுக்கு பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
பிரதமர் கோவிலை விட்டு ஓய்வுக்கு சென்ற சில நிமிடங்களிலேயே திருக்கோவில் மீண்டும் திறக்கப்பட்டதால் சுவாமி தரிசனத்திற்கு வந்து காத்திருந்த ஏராளமான பக்தர்கள் முண்டி அடுத்துக்கொண்டு தற்போது ராமநாதசுவாமி வழிபட்டு செல்கின்றனர்.