பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயகவாதி அல்ல… ”சர்வாதிகாரி” : தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கிய வைகோ!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 5:14 pm

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயகவாதி அல்ல… ”சர்வாதிகாரி” : தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கிய வைகோ!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், டெல்லியில் விவசாயிகள் 6 மாத காலம் போராடிய போது பிரதமர் மோடி அவர்களை சந்திக்கவில்லை. ஆனால் தற்போது 9-ஆவது முறையாக தமிழ்நாட்டுக்கு அவர் வருகிறார். எப்படியாவது திரும்பத் திரும்ப இங்கு வந்து தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை பார்த்து கனடா நாட்டிலும் செயல்படுத்துகின்றனர். இப்படி மக்களுக்காக கவலைப்படுகிற சிந்திக்கிற முதல்வர் கிடைத்துள்ளார்.

ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே பண்பாடு, ஒரே நாடு, ஒரே மதம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். பல மாநிலங்களைக் கொண்டது இந்தியா. பல தேசிய இனங்களைக் கொண்டது. இதில் ஒரே மொழி, ஒரே மதம் என்று கூறுவது பாசிசம். இதனை அகற்றத்தான் இந்தியாவில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

திமுகவை அழிக்க நினைக்கின்றனர். அடக்கு முறையின் மூலம் எந்த இயக்கத்தையும் அழிக்க முடியாது. சர்வாதிகாரிகள் நிலைத்து நின்று ஆட்சி நடத்த முடியாது. இந்த நாட்டின் பெருமையை ஜனநாயகம்தான். பேச்சுரிமை, மொழியுரிமை என்று வரும்போது செந்தமிழை விடவா இன்னொரு மொழி இருக்கிறதா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை சுற்றி வந்து பணியாற்றியுள்ளார். என்ன ஜாதி இனமென்று பார்க்காமல் அனைவருக்கும் ஆக உழைத்து உள்ளார். இப்படி பணியாற்றியுள்ள கனிமொழியை மீண்டும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தான் அவருக்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளார் என்ற பெருமையை தர வேண்டும், என்றார் அவர்.

  • Vishal Ready for Marriage Ceremony பத்திரிகையோடு நடிகர் விஷால்… விரைவில் திருமணம் : நல்ல நேரம் ஸ்டார்ட்..!!