தீர்ப்பு வாசிக்கும் போது தண்டனையை கேட்டு நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி : தேடி அலையும் போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan2 November 2022, 1:44 pm
போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் கைதி தப்பியோடியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரைமாவட்டம் உத்தப்பநாயக்கனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட நடுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் (வயது 28). இவர் கடந்த 2017-ல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் சுரேஷை உத்தப்ப நாயக்கனூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்காக நீதிமன்றத்தில் சுரேஷ் ஆஜராகியிருந்தார். நீதிமன்றம் கூடியதும் சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ,000 அபராதம் விதிப்பதாக நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பை வாசித்தார்.
இதை கேட்டதும் நீதிமன்றத்தில் நின்றிருந்த சுரேஷ் நீதிமன்றத்திலிருந்து வெளியே ஓடினார். அவரை பிடிக்க நீதிமன்ற ஊழியர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இருப்பினும் சுரேஷ் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.
அவரை மதுரை அண்ணாநகர் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறப்பு நீதிமன்றத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.