3 மாத தவணை பாக்கி… நெல் அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்ய வருகை… விவசாயியின் விபரீத முடிவால் அதிர்ந்து போன அதிகாரிகள்..!
Author: Babu Lakshmanan8 July 2023, 2:33 pm
ராணிப்பேட்டை ; வானாபாடி கிராமத்தில் 3 மாதங்களாக தவணை கட்டாததால், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் வந்ததால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பெருமாள் (35) இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஆண்டு லோன் மூலம் 27 லட்சம் மதிப்புள்ள நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை வாங்கியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டதால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருமாளின் வீட்டிற்கு நேரில் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அவர், அந்த ஊழியர்களுக்கு முன்பு நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.