தனியார் பேருந்து ஓட்டுநரின் அட்டகாசம்… அதிவேகமாக WRONG ROUTE-ல் பயணம்… திகைத்துப் போன பயணிகள் ; அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan14 February 2024, 2:39 pm
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளின் உயிரையும் பொருட்படுத்தாமல், எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து தொப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்ப குதியில் சுமார் 6 கி.மீ தொலைவு வரை, தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி- சேலம் சாலையில் உள்ள கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில் முதல் வளைவு, 2ம் வளைவு, கணவாய், இரட்டை பாலம், போலீஸ் கோட்ரஸ் ஆகிய பகுதிகளில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
இதனால் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள், சாலை விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்து, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த வழியாக செல்லும் தனி யார் பஸ்கள் அதிவேகமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில், இன்று தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, சாலை விதிகளை மீறி சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரும் போது விபத்துகள் நடைபெறும் இடத்தில் அதிவேகமாக எதிர்திசையில் சென்றுள்ளது.
அவ்வாறு அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்சில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
எனவே தொடர் விபத்துக்கள் நடைபெறும் தொப்பூர் மலைப்பாதை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது எல்லாம், தனியார் பஸ்கள் முண்டியடித்துக் கொண்டு பயணிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஆபத்தாக எதிர்திசையில் செல்லும் பஸ்கள் மீது மாவட்ட போக்குவரத்து துறை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0