கிண்டி மருத்துவமனை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. தாயார் மீது பரபரப்பு புகார்!
Author: Hariharasudhan16 November 2024, 12:27 pm
சென்னை கிண்டி மருத்துவமனை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு மருத்துவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மருத்துவர் பாலாஜி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், தான் நலமுடன் உள்ளதாக அவரே வெளியிட்ட வீடியோ அதனை உறுதிப்படுத்தியது. அதேநேரம், மருத்துவரைத் தாக்கிய விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
இதனிடையே, கைதான இளைஞர் விக்னேஷின் உறவினர்கள், மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்பதால், அடுத்தடுத்து இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சென்று தனது தாய்க்கு சிகிச்சை அளித்ததாகவும், அதில் ஒரு மருத்துவர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கக்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் விக்னேஷின் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜேக்கின் மோசஸ் eன்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் மீது அவதூறு பரப்பி வருவதாக புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பற்றிய நெருப்பு.. தீயில் கருகிய 10 குழந்தைகள்.. உ.பியில் சோகம்!
இதன்படி, அந்தப் புகாரில், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, அவருக்கு அங்கு வழங்கப்பட்ட மருந்தால் தான் நோயாளி உடல்நிலை மோசமடைந்தது என நான் கூறியதாக தவறான கருத்துகளை பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.
நுரையீரல் தொடர்பான பிரச்சனைக்கு 3 முறை என்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்து உள்ளார். எனது அறிவுறுத்தலின் பேரில், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்டார். என்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் லோகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.