பள்ளிக்கு அருகே டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு : கொந்தளித்த பொதுமக்கள்… சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2022, 6:53 pm
கோவை தடாகம் சாலை கே.என். ஜி.புதூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.புதூர் பகுதியிலிருந்து கவுண்டர்மில் செல்லும் சாலையில் அமைந்திருந்த தனியார் திருமண மண்டபம் அண்மையில் உணவகத்துடன் கூடிய டாஸ்மாக் மதுபான கூடமாக மாற்றப்பட்டது.
எஃப்.எல் 2 வகை மதுக்கூடமாக செயல்பட்டு வந்த நிலையில் அந்த மதுக்கூடத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கூடத்திற்கு அருகில் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் மதுக்கூடத்தினால் மாணவ மாணவியர் பாதிப்புக்கு ஆளாவதாகவும் மதுபோதையில் அதிவேகத்தில் சிலர் வாகனங்களை இயக்குவதால் விபத்து நேர்வதாகவும் அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து சிறிது நேரம் அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கலைந்து சென்றனர்.