அண்ணாமலை உருவப்படம் எரித்து போராட்டம்.. முற்றும் மோதல் : அதிமுகவினர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2023, 12:30 pm
தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணிக்குள் சமீப காலமாக பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக பாஜகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் இரு கட்சிக்குள் மோதல் முற்றி வருகிறது.
இருப்பினும் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சமயத்தில் இந்த கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எட்பபாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இருகட்சியினர் இடையே தற்போது வார்த்தை போர் நீடித்து வருகிறது. அதிமுக தலைவர்கள் பாஜகவினரையும், பாஜகவினர் அதிமுகவினரையும் தினமும் வசைப்பாடி வருகின்றனர். இதனால் இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணியை சேர்ந்த 4 பேர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்தனர். கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிளை அதிமுக இணைத்து கொள்வதாக குற்றம்சாட்டி இந்த செயலை செயத்னர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் பாஜகவினரின் இந்த செயல் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் எரித்தனர்.
25க்கும் அதிக அதிமுகவினர் ஒன்றிணைந்து இந்த செயலை செய்தனர். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்ததை எதிர்த்து அவர்கள் அண்ணாமலையின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிமுகவினரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணியில் கொந்தளிப்பான சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.