இது நிரந்தரமான பிரிவல்ல.. டெல்லிக்கு போன் போட்ட கிருஷ்ணசாமி ; வடக்கில் இருந்து வந்த முக்கிய அப்டேட்..!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 2:19 pm

அதிமுக பாஜக கூட்டணி முறிவு எதிர்பார்க்கமால் நடந்தது, இது நிரந்தரமானது இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வரிசையில்,
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் குறைந்தது, மூன்று மாதங்களுக்கு தெரு முனை பிரச்சாரம் நடத்த உள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடப்பது வழக்கம். அங்கு டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து, அதனை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து, தமிழகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெறும்.

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதியாக மின் கட்டண உயர்வு இருக்காது என்று சொன்னார்கள். அதனையும் செய்யவில்லை. சிறு குறு தொழிற்சாலைகள் பீக் அவர்ஸ் சார்ஜஸ் காரணத்தால் பாதிக்கின்றன. பொதுமக்களும் இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

திமுகவை பொருத்தவரை ஆட்சியில் இல்லாதபோது, காவிரி பிரச்சினையை முன்னிறுத்தி போரட்ட்டம் நடத்துவார்கள். இப்போது, காவிரி மேலாண்மை தெரிவித்துள்ள அளவு நீரை கூட வாங்கி தர முடியவில்லை. இந்த பிரச்சினை குறித்து முதலமைச்சர் மவுனமாக உள்ளார், ஒரு அறிக்கை கூட வழங்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள 53 சுங்க சாவடிகளில் 20 மேற்பட்ட சுங்க சாவடிகளில் குத்தகை முடிந்ததாக தகவல் உள்ளது. இன்று வரை சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து வெள்ளை அறிக்கை மத்திய அரசு நெடுஞ்சாலைத்துறை வெளியிட வேண்டும்.

சுங்க சாவடிகள் வழிப்பறி போல் அதிக கட்டணம் வசூல் செய்கிறது. மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி சட்ட விரோதமாக நடத்தக் கூடிய சுங்க சாவடிகளை மூட வேண்டும். பாஜக அதிமுக கூட்டணி முறிவு சற்றும் எதிர்பார்க்காமல் நடந்தது. இது நிரந்தரமானது அல்ல, சரி செய்யப்படக் கூடியது.

பாஜக, அதிமுக மாநில தலைவர்களுக்கு இடையில் நடந்த கருத்து மோதல். இது ஒரு சின்ன கருத்து மோதலால் நடந்த முடிவு. இது கொள்கை ரீதியான முடிவு அல்ல. நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தலையிட்டு நல்ல முடிவை கொண்டு வரும். இப்போது வரை கூட்டணி குறித்த எந்த முடிவும் இல்லை. தேவைப்பட்டால் தேர்தல் நேரத்தில் புதிய தமிழகம் கட்சி முடிவினை அறிவிக்கும்.

வார்த்தை போரால் ஏற்பட்ட பிரச்சினைக்காக தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்து விடும் என்று கருதவில்லை. கூட்டணி இருக்கும் பொழுது வெற்றி பெறக்கூடிய சூழலில் பிரிவு ஏற்பட வேண்டுமா என்று கேள்வி எழுகிறது. புதிய தமிழகம் கட்சி சார்பில் டெல்லியில் முக்கிய தலைவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த கூட்டணி சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேசி உள்ளேன், என்றார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu