நடுரோட்டில் மாறி மாறி அடித்துக்கொண்ட பள்ளி மாணவர்கள்: வைரல் வீடியோவால் சர்ச்சை..அதிர்ச்சியில் பெற்றோர்..!!
Author: Rajesh28 April 2022, 10:33 am
கோவை: ஒண்டிப்புதூரில் அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி சாகச பயணம் செய்வது, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பது, ஆசிரியர்களை தாக்குவது, சக மாணவர்களை ராகிங் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து சாலையில் அடித்துக்கொண்ட வீடியோ ஒன்று இந்த வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறது.
ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஒதுங்கி நின்றனர்.
இதனை காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.