புதுச்சேரியில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு… புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு!

Author: Babu Lakshmanan
14 February 2024, 2:04 pm

கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரியில் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரியின் முதல்வர் ந.ரங்கசாமி, பொதுப்பணி துறை அமைச்சர், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு புதுச்சேரியில் இன்று (14-02-2024) நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான கேப்டன் பிரதாபன் பங்கேற்று பேசுகையில்:

“வருடந்தோரும் மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை ஈஷாவில் 30 ஆவது ஆண்டாக நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி விழா, கோவை தவிர்த்து மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் புதுச்சேரியின் முதல்வர் திரு. ந.ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. லக்ஷ்மி நாரயணன் மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. சாய் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் நேற்று (பிப் 13) காரைக்கால் பகுதியை வந்தடைந்து, அன்றைய நாள் முழுவதும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்தது. இதை தொடர்ந்து , இந்த ரதம் சிதம்பரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வருகை தந்து பின்னர் திருச்சியை நோக்கி பயணிக்க இருக்கிறது. முன்னதாக, புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் ஜன 16 மற்றும் ஜன 17 ஆம் தேதிகளில் இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஈஷா தன்னார்வலர்களான திரு. மதிவாணன், திரு. பாக்கியசாலி ஆகியோர் உடனிருந்தனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?