பெண்களை குறிவைத்து கொள்ளை : தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாட்ச்மேன் கைது…
Author: kavin kumar30 ஜனவரி 2022, 7:04 மணி
புதுச்சேரி : புதுச்சேரியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்டனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் முத்தாலு (60). இவர் கடந்த நவம்பர் மாதம் தனது வீட்டின் வெளியே தன் பேத்திக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். அன்றைய தேதியில் புதுச்சேரி வில்லியனூர் பகுதி கூடப்பாக்கம் சாலையில் ஆசிரியையிடமும் மர்ம நபர் ஒருவர் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இது குறித்து மூதாட்டி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திலும், ஆசிரியை வில்லியனூர் காவல் நிலையத்திலும் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆசிரியிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு விட்டு தப்பி செல்லும் மர்ம நபர் கீழே விழுந்து தப்பி செல்வதும், அவரை ஆசிரியை மடக்கி பிடிக்க முயன்றதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. அதே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தான் ரெட்டியார்பாளையம் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மூலகுளம் பகுதியில் ரெட்டியார்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது சிசிடிவி கேமிராவில் பதிவான உருவம் கொண்டவர் போலவே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் பிடிப்பட்டவர் தான் தொடர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக் (43) என்பதும், அவர் லிங்கரெட்டி பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு சார்பு பள்ளியில் வாட்ச்மேனாகவும், பகுதி நேரமாக திலாசுப்பேட்டை பகுதியில் இறைச்சி கடையும் நடத்தி வந்துள்ளார் என்றும்,
கொரோனா காலகட்டதில் சரியான சம்பளம் மற்றும் வருமானம் இல்லாத காரணத்தினால் இவருக்கு கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால், கடனை அடைப்பதற்காக செயின் பறிப்பில் ஈடுப்பட்டதாகவும், இதை போல் கோரிமேடு காவல் நிலையத்தில் ஒரு மூதாட்டியிடமும் செயின் பறிப்பு வழக்கிலும், விழுப்புரம் மாவட்டமான ஆரோவிலில் 2 வழிபறி வழக்கிலும், கண்டமங்கலத்தில் 1 வழிபறி வழக்கிலும் போலீசார் அசோக்கை தேடி வருவதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0