வினோத பறவைகளால் ரூ.40,000 வரை நஷ்டம்.. குமுறும் புதுக்கோட்டை விவசாயிகள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Author: Hariharasudhan10 December 2024, 7:23 pm
புதுக்கோட்டை, தாணிக்காடு கிராமத்தில் வரும் வினோத பறவைகளால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மதகம் ஊராட்சியில் உள்ளது தாணிக்காடு என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 180 ஏக்கருக்கும் மேலான இடத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தப் பகுதியில் உள்ள நெல் விவசாயமானது, பருவ மழையை நம்பியே பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு சரியாக நெற்கதிர்கள் விளையும் நேரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக வினோத பறவைகள் ஒன்று வருவதாகவும், அவ்வாறு வருகை தரும் பறவைகள் வயல்களில் நெற்கதிர்கள் துவங்கும் நேரத்தில், அதன் அடிப்பகுதிக்குச் சென்று வேருடன் பிடுங்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது, அதில் வரும் குருத்துகளை சாப்பிட்டு விட்டு, அந்த கதிர்களைக் கொண்டு கூண்டு அமைப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்படும் கூட்டில் தங்கும் பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கள் இனத்தை விருத்தி செய்து வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை பைல்ஸ் 1.. DMK Files 3-க்கு பதில்? திருச்சி சூர்யா பரபரப்பு பதிவு!
மேலும், இந்த நிகழ்வு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதால், ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 மூட்டைகள் வரை நெற்பயிர்கள் விளைந்து வந்த நிலையில், இந்த அரிய வகை பறவையின் தாக்குதலால், ஏக்கருக்கு 5 மூட்டை அளவு தான் நெல் கிடைப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாது, இந்த அரிய வகை பறவை இனத்தை அடையாளம் கண்டு, அதனைத் தடுத்து நிறுத்த வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறையினருக்கு புகார் அளித்ததாகவும், ஆனால் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தைக் காக்க அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க முன்வரவில்லை என்றால், அப்பகுதியில் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.