குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு… பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் கொடூரம் ; ஆட்சியர் நேரில் விசாரணை!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 5:38 pm

புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் அனைத்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள் தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது, அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையம் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, அந்த பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அய்யனார் கோவிலுக்கு எங்களை அனுமதிக்கவில்லை என்றும், டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு, அந்த பகுதியில் உள்ள மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், காவல்துறைக்கு ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu