போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் திடீர் உயிரிழப்பு : புதுக்கோட்டையில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan25 November 2024, 10:30 am
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சாந்தநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(36) உள்ளிட்ட 12 பேரை போதைப் பொருள் தடுப்பு காவல் துறையினர் போதை ஊசி செலுத்தியதற்காக விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
முதலில் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பின்னர் அவர்களை வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது விக்னேஷ்க்கு பல்ஸ் குறைந்து உயிரிழந்துள்ளார். பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு விக்னேஷின் குடும்பத்தாரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக விக்னேஷ் குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: அட்ராசக்க… தங்கம் விலை சரிவு : இதுதான் நல்ல சான்ஸ்..!!!
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிரிழந்த விக்னேஷின் உடல் உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் போதை ஊசி செலுத்திய விக்னேஷ் உட்பட 12 பேரை அழைத்துச் சென்று பின்னர் விடுவித்து விட்டதாகவும் அதே போல் தான் விக்னேஷின் உறவினர்களை அழைத்து விக்னேஷை அழைத்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் உறவினர்கள் யாரும் அவரை அழைத்துச் செல்ல முன்வரவில்லை என்றும் கூறினர்.
பின்னர் அவரது நண்பர்கள் விக்னேஷ் அழைத்து சென்று அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது அவருக்கு பல்ஸ் இல்லை இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாகவும் மற்றபடி காவல்துறையினருக்கும் இந்த உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகின்றனர்.