10 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்பனை : கிராம உதவியாளர் தேர்வில் சர்ச்சை… வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2022, 6:29 pm
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின்படி மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 7 ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டன. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதையடுத்து கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது. இதற்காக மாவட்டத்தில் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கான எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது.
விண்ணப்பம் செய்தவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது.
மதுரை தெற்கு தாலுகா பகுதியில் உள்ள ஆங்கில திறனறி தேர்வுத்தாள்கள் வலைதளங்களில் பரப்பப்பட்டதாகவும் முழுமையான வினாத்தாள்களை பெற ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
இந்த விவகாரம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்வுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானதை கேட்டு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
மேலும் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை துவங்கினர். அதோடு புதிதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.