விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு… காரில் உதகைக்கு பயணம்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2023, 11:21 am
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். உச்சநீதிமன்றம் அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், அவருடைய எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் எம்.பி.யாக தேர்வாகிய கேரளாவின் வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார். அதற்கு முன் அவர் தமிழகம் வந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்கிறார். இன்று காலை விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்தி பின்னர், நீலகிரி மாவட்டம் உதகை செல்கிறார்.
அங்கு தனியார் விடுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து தேநீர் அருந்துகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை சந்திக்கிறார். அதன்பின் ஹோம் மேட் சாக்லேட் குறித்து கேட்டறிகிறார்.
பின்னர் நீலகிரி செல்லும் வழியில் முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று, அந்த மக்களிடம் கலந்துரையாடுகிறார். மேலும், அவர்களது கோவிலையும் பார்வையிடுகிறார். அதன்பின் சாலை மார்க்கமாக கூடலூர் வழியா வயநாடு செல்கிறார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.