இந்த பஸ்ஸுக்கு எல்லாம் டிக்கெட் எடுக்க முடியாது… பேருந்துக்குள் கொட்டிய மழை… பயணிகள் – நடத்துநரிடையே வாக்குவாதம்!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 4:51 pm

விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் உள்பகுதி முழுவதும் மழைநீர் வடிந்ததால் நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தற்பொழுது கோடைக்காலம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். மாலை தீடீரென்று மழை பெய்ததது. அப்போது, அரசு பேருந்தின் மேல் கூரை முழுவதும் சேதமடைந்து இருந்ததால் மழைநீர் அரசுப் பேருந்தினுள் வடியத் தொடங்கியது.

இதனால் பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்து கொண்டே சீட்டுகளில் உட்கார்ந்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் மழை நீரில் நனைந்து கொண்டே வருவதற்கு எதற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்தனர். இதனால், பேருந்தினுள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் இதில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் அரசு பேருந்துக்குள் பெய்த மழையை ரசித்தவாறு மழையே வா வா என்றும் மழை பெய்கிறது என்றும் மழையில் நனைந்தவாறு சந்தோஷமாக பாடல் பாடினான்.

இதனைக் கண்ட மற்ற பயணிகள் சின்ன பையன் பாடுவதை ரசித்தாலும், டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் தமிழக அரசு இது போன்று உள்ள அரசுப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் மாற்று பேருந்தை இந்த வழித்தடத்தில் விட வேண்டும் எனவும் புலம்பியவாறே அரசுப் பேருந்தில் பயணித்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 482

    0

    0