அன்று அது நடந்ததால் தான்.. திடீரென கன்னடத்தில் வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!

Author: Hariharasudhan
18 January 2025, 6:00 pm

தான் படித்த பள்ளியின் 90ஆம் ஆண்டு விழாவுக்கு கன்னடத்தில் பேசி ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் படித்த ஆச்சார்யா பாத ஷாலா (Acharya Pathashala) பள்ளியின் 90வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இந்தப் பள்ளியில் தான் படித்த நினைவுகளை வீடியோ ஒன்றின் மூலம் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது பாங்காக்கில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன்.

ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததில் நான் பெருமைப்படுகிறேன். முதலில், நான் கவிப்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்க வந்தேன். அப்போது கன்னட மீடியத்தில் தான் சேர்ந்தேன். அந்த நேரத்தில், நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். அது மட்டுமல்லாமல், நன்றாக படிக்கும் மாணவனாகவும் இருந்தேன்.

அப்போது, நான் தான் கிளாஸ் லீடரும் கூட. பாடங்களில் 98 மதிப்பெண்கள் பெற்றேன். நன்றாகப் படித்து வந்த என்னை, எனது அண்ணன் ஏபிஎஸ் பிள்ளியின் ஆங்கில மீடியத்தில் சேர்த்தார். முழுக்க முழுக்க கன்னட மீடியத்தில் படித்துவிட்டு, ஆங்கில மீடியத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, முதல் பெஞ்ச் மாணவனான நான், கடைசி பெஞ்சில் மாணவனாக மாறினேன்.

Rajinikanth school memories video

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்திலே மூழ்கினேன். ஏபிஎஸ் உயர்நிலைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் எனது சிரமத்தை புரிந்து கொண்டு, என் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்தனர். எப்படியோ, 9ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றேன். ஆனால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெயில் ஆகிவிட்டேன்.

இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த சித்தப்பா… வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை!!

இருப்பினும், ஆசிரியர்கள் என் மீது சிறப்பு கவனம் செலுத்தி, டியூஷன் எடுத்து மீண்டும் தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றேன். என்னுடைய பள்ளி நாட்களில், நான் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு, வகுப்பில் சக மாணவர்களின் வெவ்வேறு கதைகளையும் சொல்வேன்.

நான் பார்த்த படங்களை என் நண்பர்கள் முன் நடித்துக் காண்பிப்பேன். இப்படிச் செய்வது ஆசிரியர்கள் பலருக்கும் தெரியும். இதன் காரணமாக, அவர்கள் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தனர். ஆதி சங்கரர் சண்டாளர் நாடகத்தில் நான் சண்டாளனாக நடித்தேன். எங்களுடைய நாடகம் அதில் பரிசு பெற்றது. அதற்காக, எங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அன்று எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது நடிப்பதே எனது தொழிலாகிவிட்டது. முடிந்தவரை, பல குழந்தைகளை மகிழ்விக்க முயற்சி செய்கிறேன். இதற்கெல்லாம் காரணம், ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரி” எனத் தெரிவித்து உள்ளார்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!
  • Leave a Reply