பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்கும் ஆந்திரா… புதிய தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு… தமிழக அரசுக்கு கொடுத்த அழுத்தம்!!
Author: Babu Lakshmanan26 February 2024, 4:47 pm
பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா குப்பம் சாந்திபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- 1892ம் ஆண்டு ஒப்பந்தப்படி கடைமடை பாசன மாநில ஒப்புதலின்றி புதிய அணை கட்டக்கூடாது. ஆந்திரத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் தவிர தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. பாலாற்றின் குறுக்கே மேலும் தடுப்பணைகள் கட்டினால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட பாலாற்றில் தண்ணீர் வராது. பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.