எந்த ஆட்சியாக இருந்தாலும் பாமக தான் கெத்து… இது ஆக்கப்பூர்வ அரசியலுக்கு கிடைத்த வெற்றி.. ராமதாஸ் அதிரடி!!
Author: Babu Lakshmanan11 ஜூன் 2022, 1:14 மணி
தமிழகத்தில் யார் ஆட்சி இருந்தாலும், அந்த ஒரு விஷயத்திற்கு பாமக தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தத் தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்த காவலர் உள்பட பல ஆண்களும், பெண்களும் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் ஒரு பகுதியாக, பாமக சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதனிடையே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக பெருமிதமடைகிறது.
வல்லுநர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டு்ம் என்று வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0