‘குடும்பத்தில் இருந்து இன்னொருவரா? எனக்கு அப்டி யாரும் வேணாம்’.. ராமதாஸ் – அன்புமணி மோதல்!
Author: Hariharasudhan28 December 2024, 3:14 pm
பாமக இளைஞரணி தலைவர் நியமிப்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பட்டாணூரில், பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசினார். அப்போது, “கட்சிக்கு நல்ல நிர்வாகிகள் தேவை. கட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கெல்லாம் புதிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது“ என்று குறிப்பிட்டார்”எனக் கூறினார். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசி முடித்தவுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரின் பெயரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், ‘அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்’ எனவும் கூறினார். இதற்கு அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காரணம், முகுந்தன் என்பவர், ராமதாஸின் மகள்வழிப் பேரன் ஆவார். இதனால், கோபமடைந்த அன்புமணி, கையில் இருந்து மைக்கை மேஜை மீது தூக்கி எறிந்தார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், அன்புமணி ராமதாஸ் தன்னுடைய மொபைல் எண்ணை தொண்டர்களிடம் வழங்கி, எதுவாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதால், விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முன்னதாக, ’கட்சியில் நான்கு மாதம் தான் ஆகிறது. நல்ல அனுபவசாலிகளை போடுங்கள்.” என அன்புமணி கூறினார்.
இதையும் படிங்க: அப்பவே அதிமுக செய்திருந்தால்.. அண்ணா பல்கலை., சம்பவமே நடந்திருக்காது.. கைகாட்டும் கனிமொழி எம்பி!
இதனையடுத்து, “நான் எடுக்கும் முடிவில் விருப்பம் இல்லையென்றால், யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம்’ என்றார் ராமதாஸ். அப்போது, ‘குடும்பத்தில் இருந்து இன்னொருவரா?’ என முணுங்கினார் அன்புமணி. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்த பாமக எம்எல்ஏ அருள், “இது சலசலப்பு தான். இன்றே இது சரியாகிவிடு” எனக் கூறியுள்ளார்.