நெற்பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள்… பயிர்களை கட்டிப்பிடித்து கதறி அழும் விவசாயிகள்…நெஞ்சை உருக்கிய காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 3:57 pm

ராணிப்பேட்டை : பள்ளமுள்வாடியில் நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அதிகாரிகள் நாசம் செய்ததால், பயிர்களை கட்டியணைத்து விவசாயிகள் அழும் காட்சிகள் நெஞ்சை உருக்கியது.

தமிழகத்தில் நீர்பிடிப்பு ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாவட்டம் தோறும் துரிதமாக வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்காவிற்குட்பட்ட கலவை அடுத்த பள்ளமுள்வாடி பகுதியில் வசித்து வருபவர் பாலு. இவருக்கு சொந்தமான 2 ½ ஏக்கர் விளை நிலம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட கால்வாய் புறம்போக்கு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், விவசாயி பாலு அந்த நிலத்தில் மூன்று மாத பயிரான ADT 37 ரக குண்டு நெற்பயிர் சாகுபடியை பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யாரும் இல்லாத போது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டிராக்டர் இயந்திரம் மூலமாக பயிறிட்ட ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள நெற்பயிர்களை முழுமையாக அழித்து நாசம் செய்துள்ளனர்.

இன்னும் 4, 5 தினங்கள் கால அவகாசம் வழங்கி இருந்தால் அறுவடை முடித்த பிறகு, நாங்கள் அந்தப் ஆக்கிரமிப்பு பகுதியில் விவசாயம் செய்திருக்க மாட்டோம் என பாலு மற்றும் அவரது மனைவி பார்வதி அழிக்கப்பட்ட நெற்பயிர்களை கட்டி அணைத்து அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

ஆக்கிரமிப்பு பகுதி என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து இருந்தால், அந்த நெற்பயிர் அறுவடை செய்து இருப்போம் அல்லது அரசாங்கமே அதை அறுவடை செய்து, ஆதரவற்ற இல்லம் போன்றவைக்கு கொடுத்து இருந்தால் கூட, மனது ஆறியிருக்கும் என கூறி கதறி அழுத விவசாயி, தற்போது பயிரிட்ட நெற்பயிர்கள் யாருக்கும் பயனில்லாமல் மண்ணோடு மண்ணாக போய்விட்டது, என்றார்

பயிர் செய்ய பயிரிட படாதபாடு படுகிறோம். எனவே இந்த பயிர்களை நாசம் செய்யாமல் உரிய கால அவகாசம் கொடுத்து பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த விவசாயி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!